அன்பு மகனுக்கு…..

என் செல்வமே,  உன் தந்தையாகிய நான் உனக்கு வரையும் முதல் அன்பு மடல். நீ இந்த உலகுக்கு அறிமுகமாகி பதினொரு மாதங்களே ஆன தருணத்தில் உனக்கு கடிதம் எழுதுவது சற்று வேடிக்கையாக‌ தோன்றும் . இப்பொது நான் சொல்வதை படிக்கவோ புரிந்து கொள்ளவோ உன்னால் முடியாது. உனக்கு புரியும் மழலை மொழியில் எழுத எனக்கு தெரியாது. ஆனால் ஓரு நாள் நீ இதை விரும்பி படிப்பாய் என்றே நினைக்கிறேன்.

இந்த‌ க‌டித‌ம் எழுதுவத‌ற்க்கு வேறு ஓரு காரணம் இருக்குமானால் அது  உன்னுடன் கொஞ்சி விளையாட முடியாத நிலையை எண்ணி வருந்தும் மனதுக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் முயற்ச்சியகவே இருக்கும்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.”

என்று குழந்தைகள் பேசும் மொழியைக் கேட்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி என்கிறார் வ‌ள்ளுவர். இந்த பாக்கியதை உன்னை பெற்றதால் பெற்றவன் நான். என் வாழ்வின் மிக மகிழ்வான தருணம் என்ன என்று கேட்டால் அது நான் உன்னை முதன்முதலில் கையில் ஏந்திய நொடியாகதான் இருக்கும். உன் பிஞ்சு கை கால்களின் மென்மையில் நான் மெய் மறந்தே  போனேன்.

என் செல்ல குட்டியே, இந்த கடித‌த்தில் என் வாழ்க்கை அனுபவத்தில்
நான் தெரிந்து கொண்டதை,  புரிந்து கொண்டதை ஆராய்ந்து
உனக்கு சொல்ல விரும்புகிறேன். இதில் உனக்கு பயன் உள்ளதை மட்டும் எடுத்து கொள்.

எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இது என் அம்மா எனக்கு சொன்னார்கள்.

அம்மாவின் சமயலை பாராட்டு. அதை விட சுவையான உணவு உலகத்தில் இல்லை. எப்பொதும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்.

இதயதின் வழி நட. உன் உள் மனதுடன் பேசி பழகு. அது சொல்வதை கவனி. அறிவு தடுமாறும் போது அது உன்னை வழி நடத்தும்.

உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். மற்றவர்கள் உன்னை நண்பனாக தேர்வு செய்வதை விட நீ உன் நண்பர்களை தேர்ந்து எடு. உன் வாழ்க்கை நேராகும்.

வாழ்க்கை விலைமதிப்பில்லாதது. அதே சமயம் நிர‌ந்தறமற்றதும் கூட. அதனால் ஓவ்வொரு நாளும் நமக்கு கிடைத்த வரம் ஆக‌ எண்ணி வாழ வேண்டும்.  இதை ஆங்கிலத்தில் அழகாக இப்படி சொல்வார்கள் – ‘Everyday is a gift, that is why it is called present’.  உன்னை கடந்து செல்லும் ஒவ்வொறு வினாடியும் கவனி. மாதத்தில் என்றாவது ஓரு நாள் அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்த்து ரசி. அதன் ஓளிக்கதிர்களை மனதிலும் உடலிலும் உள்வாங்கி சேமித்து கொள். வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் சிறிய இடுக்கிலிருந்து சின்னஞ் சிறிய தளிர் உணவுக்காக தன் தலையை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை உன்னால் பார்க்க முடியும். ஓவ்வொறு உயிரினத்தின் போராட்டமும் ஆரம்பமும் இதுவே.

தினமும் சிறிது நேரம்  நாளிதழ் படிப்பதிற்க்கு ஓதுக்கி கொள். உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உன்னால் அறிந்து கொள்ள அது உதவும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து சிறிது உன்னை விலக்கி கொள். இயற்க்கையை நேசி. அது மனதுக்கும் உடல‌க்கும் உற்சாகம் அளிக்கும். நல்லதும் கூட.

பள்ளி பாடத்துடன் மட்டும் நிறுத்தி விடதே. உனக்கு பிடித்தை படி. புத்தகங்களை நேசி. வார்த்தைகள் பல விசித்திர உலகங்களுக்கு உன்னை அழைத்துச் செல்லும். ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். ”கண்டதை திண்பவன் குண்டன் ஆவான்; கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான்” என்று என் தந்தை வேடிக்கையாக‌ சொல்வதுண்டு.

கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். அனுபவமே சிறந்த ஆசான். அனுபவமே சிறந்த பாடம். நாம் வாழ்வில் ஓவ்வொறு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.  கற்றலின் மேல் தாகம்  கொள். உனக்கு விருப்பமான துறையை தேர்ந்து எடுத்து அதற்கு தேவையான அறிவை வளர்த்துக் கொள்.

கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையல்ல. பேராசை கொள்ளாதே. எந்த நிலையிலும் கடமையை செய்ய மறக்காதே. இதுவே உன்னை நீ ‘self content’ ஆக உணர உதுவும்.

இந்த உல‌கம் பெரியது. அது சொல்லி கொடுக்கும் பாடங்கள் எராளம். தோல்விகள்தான் ஓரு மனிதனுக்கு நிதானத்தை கற்று கொடுக்கிறது. தொல்லை இல்லா வாழ்க்கை சுவைக்காது. துன்பமும் இன்பமும் நிலைக்காது. கண்ணதாசனின் எழுமையான வரிகள் இதே அழகாக‌ சொல்லும் -
“நடப்பதை எண்ணி வருத்தப் பட்டால் அவன் மூடன்; போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்”

அதனால் எந்த இக்கட்டான சூல்நிலையையும்  தைரியித்துடன் சந்தித்தால் வெற்றி உனதே. துணிவே துணை என்று கொள். என் அப்பா எனக்கு சொல்லிய மந்திர சொல்லும் இதுதான்.

நானும் உன் அம்மாவும் என்றும் உனக்கு நல்ல வழிகாட்டியாக  இருப்போம்.

அன்பு முத்தங்களுடன்,
உன் அப்பா

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s